இயந்திரவழிக் கற்றல் சரியா? கற்கும் கருவியியல் சரியா?

Machine Learning என்பதற்கு இயந்திரவழிக் கற்றல் சரியா? கற்கும் கருவியியல் சரியா?

இவற்றுள் எந்தச் சொற்றொடர் ஆங்கிலச் சொல்லிற்கு நெருக்கமான பொருளைத் தரும் சொல்லாக உள்ளது.

1 Like

Copied from my facebook post [1]

[1] Redirecting...

கற்குங்கருவியியல்

=================

Created Sunday 08 March 2020

Machine learning - கற்குங்கருவியியல் எண்ணவோட்டங்கள்.

இது குறித்த ஒரு ஆவணம்[0] சொல்லாய்வுக் குழுவில் இருக்கிறது. இக்கட்டுரை என்னுடைய சொல்லாக்கச் சிந்தனைகள் எப்படி ஓடுகிறது என்பதை ஆவணபடுத்திவைக்கும் ஒரு முயற்சி.

machine learning - வெகுநாட்களாக இதற்கொரு சொல் புனைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆங்கில பொருளும் சற்று குழப்பமாக இருந்ததால் ஆங்கில புலமைவாய்தோர் புழங்கும் மன்றமொன்றிலும்[2] வினாவெழுப்பியிருந்தேன். அதில் அவர்கள் கொடுத்த விடைகளின் பகுதிக சில கீழே.

“…machines that learn…”

“… it’s a type of learning, not a type of machine…”

“…‘Machine learning’ is a fixed expression, probably best considered as a compound noun…”

“It’s a kind of learning. What kind of learning? By machines. A dog park is a park. What kind of park? For dogs.”"

மிக முதன்மையான பதில் ,

“…The word machine is used in machine learning as an adjective modifying the word learning, as others have pointed out. …”

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, எனக்கு தோன்றிய சொல் “அறிவேற்றவியல்” . இந்தச் சொல் பொருந்துமா என்று சொல்லாய்வுக் குழுவில் ஒரு வினா[1]

பல சொற்கள் பரிந்துரைக்கப்பட்டன. முகநூல் நண்பரொருவர் பயில்பொறி என்ற சொல்லை பரிந்துரைத்திருந்தார்(அவர் தொடர்பு கிடைக்கவில்லை, கிடைத்தவுடன் இணைத்துவிடுகிறேன். இயலாமைக்கு வருந்துகிறேன்.) அதை அடியாய் கொண்டு பயில்பொறியியல் என்ற சொல்லையும் இட்டிருந்தேன்.

அவற்றுள் சில கீழ்வருவன

(வரிசை முறை ஏதுமில்லை, கண்ணில்பட்டபடி எடுத்தொட்டியது)

நான் பதிந்தது.

  • அறிவேற்றவியல்.

  • பொறிபயிற்றுவியல்

  • பயில்பொறியியல்

குழுவோரும்/அறிஞர்களும் பதிந்தது,

  • பொறிகற்றல்

  • கருவிக்கற்றல்

  • கருவிக்கல்வி

  • மாகனப் பயிற்றுவிப்பு

  • அறிபொறியியல்

  • அறிபொறியம்

  • தானறிபொறி

  • இயந்திரவியல்

  • எந்திரவியல்

முத்து நெடுமாறன் அவர்கள், “பொறிபயிற்றுவியல்” என்ற சொல்லை பயன்படுத்த எளிதாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். எனக்கும் அந்தச் சொல்தான் உகந்ததாய் பட்டது. எனினும் பொருள் பிசங்கிபோனது போல் ஒரு உறுத்தல். கற்குங்கருவியியல் என்பது கற்குங்கருவிகளை பற்றி படிப்பது. இன்னும் கூர்மையாக சொல்லபோனால், எப்படி கற்றுக்கொடுப்பது என்பதைப் பற்றி மட்டுமல்லாது அவை எப்படி கற்கின்றன என்பதை பற்றியும் படிப்பது. கற்றுக்கொடுக்கவும், கற்றலை ஆயவும் பலவகை நுட்பங்களும், முறைகளும் உள்ளன. இதில் மனித-பொறிஞர்களாகிய நாம் சாலப்புரிந்து செயல்படுகிறோம் என்று சொல்ல முடியாது. பொறிபயிற்றுவியல் என்ற சொல் இங்கு தான் சிக்கலை உண்டாகிற்று. அதனால் தான் “கற்குங்கருவியியல்” என்ற சொல்லை நான் பயன்படுத்துகிறேன், பரிந்துரைக்கிறேன்.

இந்தச்சொல் மட்டுமல்லாது பிற சொற்களை பெயர்க்க/படைக்க செய்த முயற்சிகளில் இருந்து வந்த சில குறிப்புகள்/படிப்பினைகள்.

  1. எந்த (ஈனுமொழி)மொழியிலிருந்து (ஏற்குமொழிக்கு)பெயர்க்கிறோமோ அந்த மொழியில் உள்ள பொருளை ஆய்தல் வேண்டும்.

  2. ஈனுமொழியில் வேர்ச்சொல் தொடர்பைக்கண்டறிவது வேண்டும்.

  3. வேர்ச்சொல் தொடர்பு சில நேரங்களில் சிக்கலையுண்டாகலாம். எ.டு: regression என்ற சொல், சுருங்குவதை குறிக்கும். எனினும் கணிதத்தில் அது, இரு மாறிகளுக்கு உண்டாண உறவை கண்டறிய பயன்படுத்தபடும் நுட்பம். இதற்கு என் பரிந்துரை - உறவாய்வு. இது அடுத்த படிப்பினைக்கு கூட்டிச்செல்கிறது.

  4. ஈனுமொழியில் சொல் தொடர்பான துறையில் முதன்முதலில் ஏன், எந்த பொருளில் பயன்படுத்தப்பட்டது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!!

  5. புனையப்படும் சொல் அறிவியல்/நுட்பியல் இயங்கத்தை குறிக்கவேண்டும். பொருள்பிசங்காதிருக்க வேண்டும்.

  6. அதே நேரம் பொருளை ஆழப்பற்றியிருந்தாலும் சிக்கல். அறிவியல் நகர்ந்து கொண்டேயயிருப்பது. காட்டாக, ரூதர்போர்டு அணுவிலுள்ள மின்னனு கருவை, திருகுசுருள் வடிவில் சுற்றிச்சுற்றி வரும் என்றார். அவர்பின் வந்த போர், அப்படி திருகுசுருள் வடிவில் பாதையிருந்தால் மின்னனு கருவிற்குள் விழுந்த்துவிடும். அதனால் சுருள்வட்ட வடிவிலில்லாம அவை ஒரு மைய வட்டங்களில் சுற்றிவருகின்றன என்று சொன்னார். இரண்டு கண்டு பிடிப்புகளுக்கும் இடையில் இரண்டு வருட இடைவெளிதான். இடைவெளி அதிகமாக இருந்திருந்தால் ரூதர்போர்டு-ஒப்பின்படி எழுதிருக்கும் தேற்றங்கள் அடிப்படையில் புனைய பட்டச்சொற்கள் பழுதடைந்து போயிருக்கும். பெயர்க்கப்படும் போது பழுதுகளும் பற்றிக்கொண்டு வரும். இந்தக்கதை கற்பனையானதி போல் தோன்றலாம். பொறுக்கவும். தற்கால எடுத்துக்காட்டொன்றை சொல்கிறேன். Deep learning என்பது Deep Neural Network(DNN) என்ற நர(ம்பிய) வலையை தளமாய் கொண்டு இயங்குவது. இது multi-layer perceptron(MLP)இன் நீட்சி. MLP பொதுவாக மூன்று இழைகளை கொண்டிருக்கும். பெறு-விழை(input), தரு-விழை(output), மறை-விழை(hidden). DNNஇல் மறைவிழைகள் பல இருக்கலாம். அதனால் அதை அடர்விழை அல்லது பல்லிழை நரவலை என்றழைக்கலாம். இது அமைப்பு வழியாய் பெயரிட்டால். இயங்குமுறை வழியில் பெயரிட்டால், பல்லிழை நரவலைகள், தரவுகளை அடுக்கடுக்காக ஆராய்ந்து பிரித்தரியக்கூடியவை. காட்டாக, காட்சியறிதல்/காட்சியுணர்தல் (computer vision) களத்தில் ஒரு படத்தை கூறுகூறாக, புள்ளிகளாக, புள்ளிகளை இணைத்து கோடுகளாக, கோடுகளை தொடுத்து வடிவங்களாக, வடிவங்களை சேர்த்து பொருள்களாக புரிந்து கொள்ளும். இப்படி அடுக்கடுக்காக புரிந்து கொள்ளுவதால் இவற்றை பல்லடுக்கு நரவலைகள் என்றும் சொல்லலாம். இராம.கி ஐயா அவர்கள் Deep learningக் ஆழ் பயிற்றுவிப்பு என்று பரிந்துரைத்திருந்தார். எனக்கு எட்டியவரை இதற்கொரு சொல் வேண்டாமென்று படுகிறது. Deep learning இப்போது differential programming என்று மாறிபோனதால் அல்ல, அப்படி மாறியிருக்கவில்லை என்றாலும் Deep learning என்ற சொல் பெயர்த்தும் எந்த வகையிலும் அது பயன்தராது என்பதால். இது அடுத்த படிப்பினை.

  7. ஈனுமொழியிலிள்ள எல்லாச்சொல்லுக்கும் தமிழ்ச்சொல் படைக்கவேண்டும் என்று அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். இது எல்லா இடத்திலும் பொருந்தாது என்பதை நினைவில் கொள்க.

  8. சொல்லாய்வுக்குழுவில் சிலநேரம், துறைவல்லுநரா - மொழிவல்லுநரா ? யார் சொல்வது சரி என்ற சிக்கல் எழுந்ததை பார்த்ததுண்டு. இருவரின் பங்குமே முக்கியமானது. துறைவல்லுநர்கள் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் குதித்து சொல் புனைந்திட நேரம் போதாது. மொழிவல்லுநர்களும் துறையறிவை கரைத்து குடித்து சொல் புனையும் வரை துறை காத்திருக்காது. இதற்கு தீர்வு சொல்லுமளவுக்கும் எனக்கு அறிவும் கிடையாது. ஆனால் இருதரப்பும் இணைந்து செயல்படுவது கண்டிப்பாக வேண்டும்.

[0] Redirecting...

[1] https://www.facebook.com/groups/col.aayvu/permalink/2097029890516249/

[2] https://english.stackexchange.com/…/machine-learning