நல்ல வினாக்கள் கேட்பது எப்படி?
உங்கள் வினாக்களுக்கு விடையளிப்பவர்களுக்கு நீங்கள் செய்யும் பெரும் உதவி நல்ல வினாக்கள் கேட்பது.
நல்ல கேள்விகள் கேட்பது எப்படி? சில குறிப்புகள்…
கேள்வியின் கருவை உங்கள் பதிவின் தலைப்பாக வையுங்கள்
உங்கள் பதிவுதான் இந்த தளத்திற்கு வருபவர்களுக்கு முதலில் கண்ணில் படும். அது கவனத்தை ஈர்க்கும் விதமாக இருந்தால், அவர்களுக்கு அதை சொடுக்கி உங்கள் முழுப்பதிவையும் படிக்கத் தோன்றும். பொத்தம் பொதுவாக இருந்தால் எளிதில் கவனத்தில் பதியாது, கடந்து சென்று விடுவர்.
-
மிகவும் முக்கியமான வேலையில் உள்ள ஒருவரை தொந்தரவு செய்வதாக நினைத்துக்கொள்ளுங்கள் - தனக்கு இருக்கு எதோ ஒரு வேலையை விட்டுவிட்டோ, தானக்கென எடுத்துகொள்ள வேண்டிய நேரத்தையோதான் உங்களுக்கு விடையளிக்க அந்த பயனர் செலவிடுகிறார். அப்படி செலவிடும் நேரம் விரயமாகமல் இருக்க நமக்கு கிடைக்கும் முக்கியமான கருவி - தலைப்பு
-
வினா ஒரு முழு வினாவாக இருக்க வேண்டும் - கட்டுரைத் தலைப்பு போலவோ, நீங்கள் உங்கள் திரையில் தோண்றும் சில சொற்களையோ அல்லது நீங்கள் பயன்படுத்தும் மொன்பொருளின் பெயரை மட்டுமோ கொடுத்தால் அது நீங்கள் என்ன செய்ய முனைகிறீர்கள் என்பதை வெளிப்படுத்தாது. அதனால் தலைப்பில்க் கேள்வியை முழுதாக கேளுங்கள்.
-
தலைப்பைக் கடைசியாக எழுதுங்கள் - சில சமயம் நாம் கேட்க வேண்டிய வினா ஒரு வரித் தலைப்பில் அடங்காதது போலத் தோன்றும், அந்நேரங்களில் வினாவை விரிவான பதிவாக எழுதிவிட்டு முடிவில் அதன் சுருக்கத்தைத் தலைப்பாக எழுதுங்கள்.
சில எடுத்துக்காட்டுகள்:
- மோசமானது: லினக்சில் ஒரு கேள்வி
- நல்லது: உபந்து லினக்சு நிறுவும் பொழுது “swap” என்று ஒரு பகுதி ஒதுக்குவது எதற்கு?
- மோசமானது: fortune.c - Segmentation Fault
- நல்லது: இந்த C மொழி தரவில் வரும் “Segmentation Fault” பிழையை எப்படிக் களைவது?
- மோசமானது: பைத்தான் elif குழப்பம்
- நல்லது: பைத்தான் தரவு எழுதும் பொழுது elif-க்கும் else-க்கும் என்ன வேறுபாடு?
தரவுகளையோ கணிணிப் பிழைகளையோ இடுவதற்கு முன் கேள்வியை விவரியுங்கள்
உங்கள் பதிவு ஒரு கணிணிப் பிழை சம்பந்தமாகவோ, அல்லது நீங்கள் எழுதும் தரவு சம்பந்தமாகவோ இருந்தால், முதலில் நீங்கள் அந்த இடத்திற்கு எப்படி வந்தீர்கள், உங்களின் எந்த செயல் அப்படி ஒரு பிழை உருவாகக் காரணாமாக இருந்தது, அந்த பிழையால் உண்டான பாதிப்பு என்ன என்பதை விவரியுங்கள். இது உங்களுக்கு பதிலளிக்க முயல்வோருக்கு உங்களை நிலையைப் புரிய வைக்க மிகவும் உதவியாக இருக்கும்.
வினாவிற்குச் சம்பந்தமான குறிச்சொற்களை வினாவில் சேர்த்திடுங்கள்
ஒரு புது பதிவு எழுதும் பொழுது உங்கள் கேள்வி சம்பதமான குறிச்சொற்களை “Tags” எனும் பெட்டியில் சேர்த்துப் பதிவிடுங்கள். இது அந்த குறிச்சொல் சம்பந்தமான துறையில் இருப்பவரின் கவனத்தை ஈர்க்க உதவும், அதேபோல் உங்களைப் போல அதே கேள்வியைக் கேட்க வருபவருக்கு எளிதில் கண்டறியவும் உதவும்.
எ.கா:
- javascript, js, react-js, frontend
- how-to, devops, ansible, automation
விளக்கம் கேட்போருக்கு விளக்கமளியுங்கள்
உங்களின் பதிவில் ஏதேனும் தகவல் விட்டிருக்க வாய்ப்பு உள்ளது, உங்களின் கேள்விக்கான விடை பல படிகளைக் கொண்டதாக இருக்கலாம், வினா பொதுவாக இருக்கும் பொழுது ஒரு குறுகிய பகுதியைப் பற்றி பதில் கேள்வி எழலாம் - இது போன்ற தருணங்களில் விளக்கம் கேட்பவருக்கு விளக்கம் கொடுத்து பதில் பதிவு இடுங்கள் அல்லது உங்கள் பதிவை திருத்தி (Edit) சேமியுங்கள்.
குறிப்பு: ஒரு பதிவைத் திருத்தியோ, புது தகவலைச் சேர்த்தோ சேமிக்கும் பொழுது, நீங்கள் செய்த மாற்றத்தை சுட்டிக்காட்டுங்கள்.
எ.கா:
நான் நடந்து செல்லும் பொழுது விழுந்து விட்டேன்.
**திருத்தம்:** வாழைப்பழத்தோல் வழுக்கி விட்டதால் விழுந்துவிட்டேன்
**திருத்தம் 2:** தோல் தானாக வழுக்க வில்லை, நான் பார்க்காமல் கால் வைத்ததால் வழுக்கி விட்டது
உங்கள் முயற்சிகளையும், விடைகாணக் கண்டறிந்த தகவல்களையும் சேர்த்துப் பதிவிடுங்கள்
உங்கள் கணிணியில் பழுது இருந்தாலோ, தரவில் புதிதாக ஒரு பிழை தோன்றினாலோ, வேலை தேடும் பொழுது புதிதாக ஒரு "requirement"ஐப் பார்த்தாலோ முதலில் அதை கூகிளில் இட்டு அது என்ன என்று பாருங்கள். உங்களுக்கு கிடைக்கும் இணைப்புகள் சில நேரம் உங்களுக்கு முழு விடையைக் கொடுத்து விடலாம். ஆனால் பல முறை அது நமக்கு ஒரு பகுதி விடையைத்தான் கொடுக்கும். அப்படிபட்ட சமயங்களில், உங்களுக்கு உதவிய அந்த தகவல்களை உங்களின் பதிவில் சேர்த்து விடுங்கள். இதனால் 2 பயன்கள் உள்ளன:
-
நீங்கள் முயன்று உங்களுக்கு உதவாத தகவல்களைக் கொடுப்பதன் மூலம், உங்களுக்கு புதிய, நீங்கள் முயன்றிராத விடைகளும், வழிமுறைகளூம் கிடைக்கும். உங்கள் சிக்கல் சீக்கிரம் தீரும்.
-
உங்களுக்கு பதிலளிக்க முயல்வோருக்கு சிக்கலின் காரணம் இதுவா அதுவா என சிந்திக்கும் நேரம், மற்றும் அந்த கேள்வியை உங்களிடம் கேட்டு நீங்கள் பதில் அளித்து, அதன் பின் விடை சொல்லும் நேரம் எல்லாம் மிச்சமாகும். இது அவர் மற்றும் ஒரு கேள்விக்கு விடையளிக்கப் பயனாகும்.
Adapted from “How do I ask a good question?” on StackOverflow Help center.